செங்குன்றம் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தபோது எடுத்த படம். 
செய்திகள்

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து: 60 தொழிலாளர்கள் மாற்று வழியில் மீட்பு

செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தின்போது அங்கு பணியாற்றிய 60 தொழிலாளர்கள் மாற்றுப்பாதை வழியாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மாலை மலர்

செங்குன்றம்:

செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தின்போது அங்கு பணியாற்றிய 60 தொழிலாளர்கள் மாற்றுப்பாதை வழியாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாயின.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் பட்டுராஜா. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. இவர் செங்குன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் எல்லம்மன் பேட்டை சாலையில் பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி பிளாஸ்டிக் பாராக தயார் செய்து பிளாஸ்டிக் குடம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து கம்பெனிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் பெண்கள் உள்பட 60 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த தொழிற்சாலையின் முன்பக்கம் ஷெட் போடும் பணி நடந்து வருகிறது. அதில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கியாஸ் சிலிண்டர் மூலம் வெல்டிங் செய்து இரும்பு தூண் அமைக்கும் பணியில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் ஈடுபட்டனர்.

அப்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து வெளியான தீப்பொறி அருகில் குவிக்கப்பட்டு இருந்த சுமார் 50 டன் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குவியல் மீது விழுந்தது. ஆனால் இதனை யாரும் கவனிக்கவில்லை.

அந்த தீப்பொறி சிறிது நேரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீது பிடித்து தீ மளமளவென பற்றி எரியத்தொடங்கியது. தொழிற்சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டது.

இதனால் பணியில் இருந்த தொழிலாளர்கள் அங்கும் இங்கும் அலறியடித்தபடி ஓடினர். அவர்களால் முன்பக்க பிரதான நுழைவு வாயிலை நெருங்க முடியவில்லை. பிரதான வழியில் தீயின் தாக்கம் அதிகமாக இருந்தது.

உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் பெண்கள் உள்பட 60 பேரும் தொழிற்சாலையின் பின்பக்கம் உள்ள அவசர வழியில் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்களும் அந்த வழியாக மீட்கப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாதவரம், மணலி, செங்குன்றம், அம்பத்தூர், ஆவடி மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை.

தீயை அணைக்க போதுமான தண்ணீரும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீசாரும் அதிகாரிகளும் சாலையில் தண்ணீர் ஏற்றி சென்ற டேங்கர் லாரிகளை வழிமறித்து, அவற்றில் உள்ள தண்ணீர் மூலம் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் நேற்று இரவு 7.30 மணி வரை 5 மணி நேரமாகியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று இரவு 8.30 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 6 மணி நேரம் போராடி தீயை வீரர்கள் அணைந்தனர்.

இந்த விபத்தில் தொழிற்சாலை முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் அங்கு ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பார்கள் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது.

தீவிபத்து நடந்த இடத்துக்கு புழல் உதவி கமிஷனர் லிங்க திருமாறன், செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த தீவிபத்து குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.