ஸ்ரீவில்லிபுத்தூர்:
தமிழக அரசின் சார்பில் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் வர இருக்கின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதனை வழங்க கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடைகளும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் செக்கடி தெருவில் உள்ள மாரியம்மன் நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் இலவச வேட்டி, சேலைகள், மாணவ-மாணவிகளின் சீருடைகள் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த சங்கத்தில் இருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் கரும்புகை வெளியானது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் புகை நெருப்பாக மாறியது.
அங்கு வந்த தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இருப்பினும் கூட்டுறவு சங்கத்தில் இருந்த இலவச வேட்டி-சேலைகள், மாணவ-மாணவிகளின் சீருடைகள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு விவரம் தெரியவில்லை.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.