ஆஷிஜோஸ் 
செய்திகள்

வன்முறை கும்பலால் காயம் அடைந்த டெல்லி மாணவர் சங்க தலைவி மீது வழக்கு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவி மற்றும் 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5-ந்தேதி முகமூடி அணிந்த கும்பல் தடியுடன் வந்து தாக்குதல் நடத்தியது.

இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்க தலைவி ஆஷிஜோஸ் உள்பட 33 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார்? என இடதுசாரிகளும், அகில பாரதிய வித்யார்த்த பரி‌ஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பினரும் மாறிமாறி குற்றம்சாட்டினர்.

இந்தநிலையில் மர்ம கும்பல் தாக்குதலில் தலையில் காயம் அடைந்த மாணவர் சங்க தலைவி ஆஷிஜோஸ் மற்றும் 19 பேர் மீது டெல்லி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வன்முறை தாக்குதலுக்கு முந்தய நாளான 4-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வர் அறையை அடித்து சூறையாடியதாகவும், காவலாளியை தாக்கியதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவாகி இருக்கிறது.முதல் தகவல் அறிக்கையில் இந்தகுற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.