செய்திகள்

பா.ஜனதா பிரமுகரிடம் ரூ. 45 கோடி பழைய நோட்டுகளை கொடுத்த பைனான்சியர் சிக்கினார்

சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று பா.ஜனதா பிரமுகரிடம் ரூ. 45 கோடி பழைய நோட்டுகளை கொடுத்த பைனான்சியர் சிக்கினார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை கோடம்பாக்கம் ஐக்கரியா காலனி 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கட்டு கட்டாக ரூ 45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கின.

அந்த பணத்தை பா.ஜனதா பிரமுகர் தண்டபாணி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவரிடம் தி.நகர் துணை கமி‌ஷனர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்போது பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தரும் கமி‌ஷன் ஏஜெண்டாக தண்டபாணி செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் ரூ. 45 கோடி பழைய நோட்டுகளை நகைக்கடை அதிபரும் பைனான்சியருமான ஜவானி என்பவர் தண்டபாணியிடம் கொடுத்தது தெரியவந்தது. ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தண்டபாணி தெரிவித்தார்.

இந்த நிலையில் தண்டபாணிக்கு ரூ. 45 கோடி பணம் கொடுத்த பைனான்சியர் ஜவானி நேற்று இரவு போலீசாரிடம் பிடிபட்டார். தண்டபாணியையும், ஜவானியையும் போலீசார் இது வரை கைது செய்ய வில்லை. இந்த வழக்கு விசாரணையை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.