சென்னை:
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த 1.9.2016-ம் ஆண்டுடன் பழைய ஊதிய ஒப்பந்தம் முடிந்தது.
புதிய ஒப்பந்தம் போடப்பட்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தபோதிலும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. 2 நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது கூட தொழிலாளர்களுக்கு ஊதிய மாற்றுக் காரணி 3 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் தரப்பில் மாற்றுக்காரணியாக 2.35 வழங்குவதாக தெரிவித்தனர். பின்னர் அதனை 2.44 உயர்த்தி வழங்குவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர். அதனால் இன்னும் ஊதிய உயர்வு உடன்பாடு ஏற்படவில்லை.
மேலும் நிர்வாகம் தரப்பில் ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் 3 ஆண்டுகள் இருப்பதை 5 ஆண்டாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. சீருடை, தையல்கூலி, பணி நிரந்தரம், தினக்கூலி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முழுமையாக ஏற்க வேண்டும் என்று தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டன.
ஊதிய உயர்வு மாற்றுக் காரணி அளவை நிர்ணப்பதில் இன்னும் எவ்வித உடன்பாடு ஏற்படாததால் நாளை (27-ந்தேதி) நடக்கும் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் பேசி தீர்க்கலாம் என விவாதிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் குரோம்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதில் தொ.மு.க., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எப்.எல்., ஐ.என்.டி.யூ.சி., பணியாளர் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தை தொழிற்சங்கம் உள்ளிட்ட 47 சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இதுபற்றி தொ.மு.ச. பொருளாளர் கே.நடராஜன் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம், தர ஊதியம் ஆகியவற்றை இணைத்து ரூ.6,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுக்காரணியாக 3 நிர்ணயம் செய்து பெருக்கி வரும் தொகை ரூ.20,700 குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
நாளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.