கொல்கத்தா:
17-வது ஜூனியர் உலக கோப்பை (17 வயதுக்கு உட்பட்டோர்) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கொல்கத்தாவில் நாளை (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேசில்-மாலி அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) போட்டிகள் அமைப்பு குழு தலைவர் ஜெமி யார்ஜா கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிக ரசிகர்கள் நேரில் கண்டு களித்த ஜூனியர் உலக கோப்பை தொடராக இது இருக்கப் போகிறது. ரசிகர்கள் வருகை எண்ணிக்கையே இந்த போட்டியின் மாபெரும் வெற்றிக்கு அடையாளமாகும். ஆட்டங்கள் உயர் தரமானதாகவும், அதி வேகமும், சிறப்பான தொழில்நுட்பங்கள் கொண்டதாகவும் இருந்தது. இந்த போட்டியை இந்தியா அற்புதமாக நடத்தி இருக்கிறது. இது இந்தியா கால்பந்தை நேசிக்கும் தேசம் என்பதை காட்டுகிறது.
6 நகரங்களும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றன என்பதை சொல்ல விரும்புகிறோம். உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் சிறப்பான முறையில் இருந்ததாக அணிகளின் பயிற்சியாளர்களும், வீரர்களும் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள். இந்த மாதிரி உயர் தரம் வாய்ந்த பயிற்சி ஆடுகளங்கள் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதி உள்பட எல்லாவகையிலும் போட்டியில் பங்கேற்ற அணிகள் முழுமையாக திருப்தி அடைந்துள்ளது. எல்லா ஆடுகளங்களும் ஜூனியர் போட்டி மட்டுமின்றி சீனியர் அளவிலான உலக போட்டியை நடத்தும் அளவுக்கு தரமானதாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
வருங்காலங்களில் இந்தியா இதுபோல் ‘பிபா’ வின் பெரிய போட்டிகளை நடத்த முடியும். இந்த மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகள் வைத்து இருப்பதற்கு இந்தியா பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இந்த போட்டி தொடர் நிறைய பேரின் இதயங்களை கவர்ந்து இருக்கிறது. இந்தியாவை கால்பந்தின் தேசமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அகில இந்திய கால்பந்து சங்கத்துடன் இணைந்து செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பிரபுல் பட்டேல் உடனிருந்தார்.
‘பிபா’ உலக கோப்பை ஒன்றை இந்தியா நடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவரை 12 லட்சத்து 24 ஆயிரத்து 27 பேர் இந்த கால்பந்து திருவிழாவை நேரில் ரசித்து இருக்கிறார்கள்.
1985-ம் ஆண்டு சீனாவில் நடந்த முதலாவது உலக கோப்பை போட்டியை 12 லட்சத்து 30 ஆயிரத்து 976 பேர் நேரில் பார்த்ததே அதிகபட்ச எண்ணிக்கையாகும். அதை முறியடிப்பதற்கு 6,949 ரசிகர் எண்ணிக்கையே தேவை. இன்னும் 2 ஆட்டங்கள் இருப்பதால் பார்வையாளர் எண்ணிக்கையில் இந்தியா சாதனை படைப்பது உறுதி.
இதே போல் இதுவரை 50 ஆட்டங்களில் 170 கோல்கள் பதிவாகியுள்ளன. இன்னும் 3 கோல்கள் அடிக்கப்பட்டால் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட தொடராகவும் இது அமையும்.