செய்திகள்

திண்டுக்கல்லில் திருவிழா கூட்ட நெரிசலில் 3 பெண்களிடம் நகை பறிப்பு

திண்டுக்கல்லில் மாசித் திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பூத்தேரில் அம்மன் 4 ரத வீதிகளிலும் வலம் வந்த போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி திருவிழாவுக்கு வந்த 3 பெண்களிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.

இது குறித்து திண்டுக்கல் ஆர்.வி.நகரைச் சேர்ந்த பாப்பாத்தி, நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது 5½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக தனது புகாரில் கூறியுள்ளார்.

இதே போல மேலும் 2 பெண்கள் தங்களது 6½ பவுன் நகையை காணவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஆங்காகங்கு பாதுகாப்புக்கு போலீசார் இருந்த போதும் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ள நிலையிலும் பக்தர்களிடம் நடந்த இந்த நகை பறிப்பு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர பூத்தேர் ஊர்வலம் தனியார் தொலைக் காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அப்படி இருந்தும் நகை பறிக்கப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews