செய்திகள்

கால்நடை வளர்ப்பிற்கு அரசு மானியத்துடன் தீவனப்பயிர்: கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் இலாபகரமான கால்நடை வளர்ப்பிற்கு அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் வழங்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திருச்சி:

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 65-70 விழுக்காடு, தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக 2017 -2018 நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனப் பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தபடவுள்ளது.

300 ஏக்கர் நிலபரப்பில் இறவையில் வீரிய ரக கம்பு நேப்பயிர் புல் கோ-3, கோ-4 சாகுபடி செய்தல் திட்டத்தில் பயனாளிகளுக்கு 0.25 ஏக்கருக்கு புல்கரணைகள் வாங்க 100 சதவீத மானியம் வழங்கப்படும் (பயனாளிக்கு அதிகபட்சம் 1 ஏக்கர்). 200 ஏக்கர் நிலப்பரப்பில் இறவையில் கோ (எப்எஸ்) 29 ரக தீவன சோளம் சாகுபடி செய்யும் திட்டத்தில் பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் 0.25 ஏக்கர் முதல் (2 கால்நடைகள்) அதிக பட்சமாக ஒரு ஏக்கர்முடிய (8 கால்நடைகள்) நிலபரப்புக்கு 100 சதவீத மானியத்தில் சோழவிதைகள் வழங்கப்படும்.

மானா வாரியில் 2000 ஏக்கர் நிலப் பரப்பில் தீவனச்சோளம், தீவனத்தட்டைப்பயிறு சாகுபடி செய்திட தீவன விதைகள் வழங்கப்படும். (பயனாளிகளுக்கு அதிக பட்சமாக 2 ஏக்கர் வரை) முன்னோடி விவசாயிகளின் மூலம் இறவையில் தரச்சான்றுடன் கூடிய தீவன சோளம் மற்றும் தட்டைப்பயிறு விதை உற்பத்தி செய்தல் திட்டத்தில் 25 ஏக்கரில் தீவன சோளமும் 10 ஏக்கரில் தட்டைப்பயிரும் சாகுபடி செய்து அதன் மூலமாக உற்பத்தியாகும் விதையை அரசின் மூலம் தீவனச்சோள விதை ரூ.50 கிலோ கிராம் மற்றும் தீவன தட்டைப்பயிறு விதை ரூ.75 கிலோ கிராமிற்கு கொள்முதல் செய்யப்படும்.

தற்போது நிலவிவரும் வறட்சியால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையால் கால்நடை தீவன உற்பத்தி இழப்பை தடுக்கும்வகையில் குறைந்த அளவு தண்ணீரில் ஹைட்ரோபோனிக் (மண்ணில்லா தீவன உற்பத்திமுறை) முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய 10 அலகுகள் ஹைட் ரோபோனிக்ஸ் உபகரணங்கள் வாங்க 75 சதவீத மானியம் வழங்கப்படும். மேலும் 1 மாத தீவன உற்பத்திக்கான மக்காச்சோள விதை வாங்க 75 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

பால் உற்பத்தி செலவை குறைக்கும் நோக்கத்தில் குறைந்த விலையில் நிறைந்த புரதம் கொண்ட அசோலா (பாசி உற்பத்தி) செய்ய 400 நபர்களுக்கு அசோலா தொட்டி இடுபொருட்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

இத்திட்டங்களின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபாடுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளிக்கவேண்டும். எல்லா திட்டங்களிலும் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவர். குறுவிவசாயிகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.