செய்திகள்

ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளா பிளாஸ்டர்சை 5-2 என வீழ்த்தியது எப்.சி. கோவா அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 20-வது லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணியை 5-2 என வீழ்த்தி எப்.சி. கோவா அணி வெற்றி பெற்றது.

மாலை மலர்

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் நேற்று மாலை நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணி, எப்.சி. கோவா அணியை எதிர்கொண்டது.

எப்.சி. கோவா அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலேயே கேரளாவின் மார்க் சிப்னியோஸ் கோல் அடித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவா அணியின் மனுவல் லென்சரோட் 9-வது நிமிடம் கோல் அடித்தார். தொடர்ந்து 18-வது நிமிடத்தில் மனுவல் இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் 31-வது நிமிடத்தில் கேரளாவின் ஜாக்கிசந்த் சிங் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர முடிவில் ஆட்டம் 2-2 என சமனானது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கோவா அணி சிறப்பாக விளையாடியது. கோவா அணியின் பெரான் கொரோமினாஸ் அடுத்தடுத்து 48, 51 மற்றும் 55-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்கப்படாததால் எப்.சி. கோவா அணி 5-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணியை தோற்கடித்தது.

4-வது லீக் போட்டியில் விளையாடிய எப்.சி. கோவா அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் எடுத்துள்ள எப்.சி. கோவா அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.