தேனி:
தேனி அருகில் உள்ள பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது59). இவருக்கு 2 மகன்கள். அதில் மலைச்சாமி (20) என்பவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் ஜோதி (19) என்பவருக்கும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மலைச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அவரது மனைவி ஜோதி கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மலைச்சாமியை அவரது தந்தை தங்கராஜ் கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மலைச்சாமி தனது தந்தையிடம் மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் தனது மகனை கழுத்து, கை, மணிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மலைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஜோதி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்திவு செய்து தங்கராஜை கைது செய்தனர்.