செய்திகள்

பெற்ற மகளை கற்பழித்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை: திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெற்ற மகளை கற்பழித்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாலை மலர்

திருச்சி:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடி மேல விளாங்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது மகள் ரேவதி (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). மனநிலை பாதிக்கப்பட்ட ரேவதி அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் பழனியம்மாள் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் காமராஜூம், ரேவதியும் மட்டும் இருந்தனர். மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ரேவதி வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்தார். அவரை உள்ளே அழைத்த காமராஜ், மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்தார். ரேவதி சத்தம் போடவே, ஆத்திரமடைந்த காமராஜ், நான் ஏற்கனவே ஒரு கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு சென்று விட்டு வந்துள்ளேன். நடந்ததை பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று பெற்ற மகளையே மிரட்டியுள்ளார். மேலும் தொடர்ந்து மிரட்டி பல முறை கற்பழித்துள்ளார். இதனால் ரேவதி கர்ப்பமானார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த பழனியம்மாள், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.

இதனிடையே கடந்த 5-3-2015 அன்று ரேவதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சுபிதா என்று பெயரிட்டு, மற்றொருவருக்கு தத்து கொடுத்தனர். ஆனால் அந்த குழந்தை 26-6-2015 அன்று பரிதாபமாக இறந்து விட்டது. இதையடுத்து அந்த குழந்தையை புதைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட காமராஜூக்கு பாலியல் வன்கொடுமை சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் 3 ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு தண்டனைக்கும் ரூ.1000 என ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் ஒவ்வொரு தண்டனைக்கும் ஒரு வருடம் என 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.

மேலும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஒரு வருடம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். 3 ஆயுள் தண்டனைகளையும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

காமராஜ் கடந்த 1997-ம் ஆண்டு இடப்பிரச்சனையில் பக்கத்து வீட்டை சேர்ந்த தானேஷ் லால் என்பவரை அடித்துக் கொன்றார். அந்த வழக்கில் அவர் 7 வருடம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்திருந்தார். தற்போது பெற்ற மகளை கற்பழித்த வழக்கில் 3 ஆயுள் தண்டனை பெற்று மீண்டும் சிறை சென்றுள்ளார். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.