தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை உள்ளது. இந்த பகுதியில் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு கடந்த 2003-ஆம் ஆண்டு பணிகளை தொடங்கியது.
இத்திட்டத்தில் 1300 மீட்டர் ஆழத்தில் குகை அமைக்கப்பட்டு அதில் ஆய்வகங்கள் அமைத்து நியூட்ரினோ சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சமூகஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.
அதனை தொடர்ந்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தேனி மாவட்ட விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.
இதுகுறித்து தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் அப்பாஸ் கூறியதாவது,
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் முல்லை பெரியாறு, வைகை, இடுக்கி மாவட்டத்தில் உள்ள அணைகள் என சுமார் 20 அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த திட்டத்திற்கு பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் பெரியாறு பாசனத்தை நம்பியுள்ள அனைத்து விளைநிலங்களும் பாதிக்ககூடும். தேனி மாவட்டம் சுடுகாடாக மாறிவிடும்.
வடமாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களில் எதிர்ப்பு வருவதால் தமிழகத்தை ஆய்வுகூடமாக மாற்றி அழிவை எதிர்நோக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு நடைபெறும் சமயத்தில் வீடுகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
முல்லை பெரியாறு மீட்புக்குழு தலைவர் ரஞ்சித்:- நியூட்ரினோ ஆய்வு மையம் தேனி மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனில்லாதது. இத்திட்டத்தால் ஆபத்துதானே தவிர எந்த பலனும் கிடையாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த திட்டத்தை நாங்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டம் தற்போது பல்வேறு காரணங்களால் பருவமழை கூட கிடைக்காத நிலையில் உள்ளது. இரவங்கலாறு பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடந்த 3 ஆண்டுகளாகவே மழை இல்லை.
தமிழகத்திற்கு எதிரான நிலையிலேயே மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இங்குள்ள பா.ஜனதா கட்சியினரும் பேசி வருகின்றனர். ஒரு நாட்டிற்காக ஒரு மாநிலத்தை இழப்பது தவறில்லை என்று கூறுவது இவர்கள் தமிழகத்தின் மீது எந்த அக்கறையை வைத்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக போராடும் அப்பாவி மக்களை பா.ஜனதா கட்சியினர் சமூகவிரோதிகள் என சித்தரிக்கின்றனர். எனவே நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கொண்டு வந்தால் தேனி மாவட்டத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும். இதனை அனுமதிக்க மாட்டோம்.
சீனிவாசன் (பேராசிரியர்):- நியூட்ரினோ திட்டத்திற்காக அம்பரப்பர் மலையை குடைந்து 2 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 11 லட்சத்து 25 ஆயிரம் டன் பாறையை 1000 டன் வெடிமருந்து பயன்படுத்தி வெடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உதாரணமாக மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்படுவதற்கு நிலத்தை குடையும்போது அதிர்வுகளால் பல வீடுகள் கீறல்கள் ஏற்படுகிறது. சிறிய அளவில் குடைவதற்கு இவ்வளவு பாதிப்பு என்றால் 11 லட்சத்து 25 ஆயிரம் டன் பாறையை வெடி வைத்து தகர்க்கும் போது எந்த அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பாறையை வெடிவைத்து தகர்க்கும் போது ஏற்படும் அதிர்வுகளால் இந்த பகுதிகளில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடியும். நீர்நிலைகள் மாசுபடும்.
பரசுராமன் (சமூக ஆர்வலர்):- நியூட்ரினோ கதிர்களை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் காந்த கருவியை குளிர்விக்க ஒவ்வொரு நாளும் 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை உள்ளது. குண்டலநாயக்கன்பட்டி முல்லைபெரியாற்று பகுதியில் உறைகிணறு அமைத்து தண்ணீர் எடுக்க பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்துள்ளனர்.
இதனால் விவசாய பணிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். நியூட்ரினோ திட்டத்தால் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் என்று பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி என்பது மக்களுக்காகத்தான். அது மக்களை அழிக்க பயன்படுத்தக்கூடாது.
சுதாகரன்(நிதி நிறுவன ஊழியர்):- நாங்கள் அறிவியல் வளர்ச்சிக்கும், விஞ்ஞானத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் கடுமையாக எதிர்ப்போம்.
நியூட்ரினோ திட்டத்திற்காக தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு நச்சு தண்ணீரை வெளியேற்ற உள்ளனர். இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே இத்திட்டத்தை கொண்டு வந்தால் தேனி மாவட்டம் பாலைவனமாகிவிடும்.
செங்குட்டுவன் (அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு மாநில துணைச் செயலாளர்):- இந்த திட்டம் அமைய உள்ள அம்பரப்பர் மலை பசுமையான பகுதி ஆகும். இங்கு அதிக அளவில் மழை பொழியக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனாலும் இது போன்ற பயனற்ற திட்டத்தை கொண்டு வருவதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்பே வானுயர மரங்களை வளர்க்காமல் கருவேல மரங்களை வளர்த்துள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் மலைப்பகுதியில் உள்ள வன விலங்குகள் இடம் பெயரும். குறிப்பாக மக்கள் வசிக்கும் பகுதிக்கு கூட வந்து விடும். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை நம்பித்தான் உள்ளனர். நியூட்ரினோ ஆய்வு மையத்துக்காக 10 டி.எம்.சி. தண்ணீர் எடுக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆண்டு முழுவதும் முல்லைப் பெரியாற்றில் 21 டி.எம்.சி. தண்ணீர்தான் கிடைக்கிறது. 10 டி.எம்.சி தண்ணீர் செலவழிந்தால் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயம் பாதிக்கப்பட்டு சுடுகாடு ஆகிவிடும்.
இந்த பகுதியில் உள்ள மக்களும் ஊரை காலி செய்து வேறு பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே இந்த திட்டத்தை கொண்டு வர விடமாட்டோம். அனை வரையும் ஒன்று திரட்டி மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும்.
வக்கீல் செல்வக்குமார்:- நியூட்ரினோ திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமே தவிர எந்தவித பயன்பாடும் இல்லை.
20 பேர் பயன்பாட்டுக்காக ஒரு மாவட் டத்தையே அழிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. இந்த திட்டத்தால் வேலை வாய்ப்பு இல்லாத சூழலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அப்போதுதான் இங்குள்ள மக்கள் ஊரை காலி செய்து வேறு இடங்களுக்கு வேலை தேடி செல்வார்கள் என்று மத்திய அரசு நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. ஆட்சியை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு மத்திய அரசு அறிவிக்கும் அனைத்து அழிவு திட்டத்துக்கும் பச்சைக் கொடி காட்டுகிறது. இந்த திட்டத்தை கொண்டு வர விடமாட்டோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பார். #tamilnews