ராயபுரம்:
தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாய சங்கத்தினர் ஐகோர்ட்டு உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1300 கோடியை உடனே அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட பாரிமுனை ராஜாஜி சாலை சந்திப்பில் குவிந்தனர்.
மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். பாரிமுனை ராஜாஜி சாலை சந்திப்பு அருகே அவர்களை உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆவேசம் அடைந்த விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலை ஓரத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 200 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
விவசாயிகளின் திடீர் மறியல் போராட்டத்தினால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.