கோப்புபடம் 
செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் கரூர் உழவர் சந்தையை திறக்க கோரி விவசாயிகள் மனு

கரூர் உழவர் சந்தையை மீண்டும் திறக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

மாலை மலர்

கரூர்:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

அதில் கரூர் உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை பெட்டியில் போட்டனர். அந்த மனுவில், மாவட்ட சுற்றுவட்டார விவசாயிகளாகிய நாங்கள் கரூர் உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்து வந்தோம். கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக உழவர் சந்தையை திருவள்ளுவர் மைதானத்தில் அமைத்து கொடுக்கப்பட்டது. அங்கு அதிக அளவில் நுகர்வோர் வராததால் அதிக அளவில் காய்கறிகள் தேங்கின. இதனால் மீதம் இருந்த காய்கறிகளை ஆடு, மாடுகளுக்கு தீவனமாக போடும் நிலைக்கு தள்ளப்பட்டோம். இதனால் எங்களுக்கு அதிக அளவில் பொருளாதாரம் சேதம் ஆகியுள்ளது. எனவே கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கரூர் உழவர் சந்தையை திறக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

கரூர் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் போட்ட மனுவில், ஏமூர் கொங்கு நகரில் பலதரப்பட்ட மக்கள் குடியிருந்து வருகிறோம். இப்பகுதியில் குடிநீர், பொது கழிவறை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதேபோல் கரூரில் உள்ள திருநங்கைகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்து பெட்டியில் மனு போட்டனர். அந்த மனுவில், எங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

இவ்வாறு பொதுமக்கள் பலர் தங்கள் குறைகள் அடங்கிய மனுவை பெட்டியில் போட்டு சென்றனர்.