கோப்புபடம் 
செய்திகள்

விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.45¾ கோடி பறிமுதல்

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை ரூ.45¾ கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

விழுப்புரம்:

மத்திய அரசு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் நிதி உதவி பெற்று வந்தனர். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 57 பேரும் முறைகேடாக சேர்ந்து பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இவர்களை கண்டறிந்து அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை திரும்ப பெறும் பணியில் வேளாண் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் 48 ஆயிரத்து 190 பேரின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அந்த கணக்குகளில் இருந்து ரூ.15 கோடியே 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு அந்த தொகை அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அதுபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 93 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.30 கோடி வரை திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.45 கோடியே 70 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் முறைகேடாக சேர்ந்த விவசாயிகள் அல்லாத மீதமுள்ளவர்களின் வங்கி கணக்கில் இருந்தும் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் வேளாண் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கைது நடவடிக்கையை பொறுத்தவரை இதுவரை 2 மாவட்டங்களிலும் சேர்த்து 35 பேர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.