செய்திகள்

பொள்ளாச்சி அருகே 2 மனைவிகளும் ஒரே வீட்டில் வசிக்க மறுத்ததால் விவசாயி தற்கொலை

பொள்ளாச்சி அருகே 2 மனைவிகளையும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்குமாறு கணவர் கூறியதால் 2 பேரும் மறுத்து உள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40). விவசாயி. இவரது மனைவி வேளாங்கன்னி (37). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் ஆகியோர் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்துக்குமார் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த மகேஷ்வரி (42) என்ற பெண்ணை காதலித்து 2-வதாக திருமணம் செய்தார். மகேஷ்வரிக்கு ஏற்கனவே முதல் கணவர் மூலமாக 3 மகன்கள் உள்ளனர். முத்துக்குமார் மூலமாக 1 மகள் உள்ளார். முத்துக்குமாரின் 2 மனைவிகளும் அருகே அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தனர்.

எனவே முத்துக்குமார் 2 மனைவிகளையும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்குமாறு கூறி வந்தார். ஆனால் 2 பேரும் தொடர்ந்து சேர்ந்து வாழ மறுத்து வந்தனர்.

இதனால் கடந்த சில நாட்களாக முத்துக்குமார் மனவேதனையுடன் காணப்பட்டார்.

சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த முத்துக்குமார் மனைவிகள் சேர்ந்து வாழ மறுத்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தென்னை மரத்துக்கு வைக்கும் மாத்திரையை எடுத்து தின்றார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த 2-வது மனைவி மகேஷ்வரி உடனடியாக முத்துக்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

பின்னர் அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4 மணியளவில் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.