திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 12 மணிக்கு, வந்த நபர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே போலீசார், அவரை தூக்கினர். அப்போது அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. மேலும் அவர் விஷம் குடித்ததால் இறந்ததாக டாக்டர் தெரிவித்தார்.
இதற்கிடையே அவர் கொண்டு வந்த கவரை கைப்பற்றி போலீசார் பிரித்து பார்த்தனர். அதில் ஆதார் அட்டை நகலுடன், புகார் மனுக்கள் இருந்தன. அதை கொண்டு விசாரித்ததில் இறந்தவர், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள காமக்காபட்டியை சேர்ந்த விவசாயி அர்ச்சுணன் (வயது 62) என்பதும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
திண்டுக்கல்லில் செயல்படும் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் அர்ச்சுணன் வீடு கட்டுவதற்கு ரூ.15 லட்சம் கடன் வாங்கினார். அதற்கு பல்வேறு தவணைகளாக ரூ.6½ லட்சம் செலுத்தி உள்ளார். மீதி தவணை தொகையை அவரால் செலுத்த முடியாமல் போனது.
பணம் செலுத்தாவிட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என்று நிதி நிறுவனத்தினர் தெரிவித்து உள்ளனர். மேலும் இது தொடர்பாக கோர்ட்டிலும் அர்ச்சுணன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் வீடு ஜப்தி ஆவதை தடுக்க முடியாமல் மனமுடைந்த அவர், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.