கைது 
செய்திகள்

தருமபுரி அருகே விவசாயி கொலை: கைதான 2-வது மனைவி வாக்குமூலம்

தருமபுரி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் விவசாயி கொன்றேன் என்று கைதான 2-வது மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரியை அடுத்த செல்லியம்பட்டி அருகே உள்ள எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்தவர் குப்பன் (வயது 43). விவசாயியான இவர் அந்த பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடீர் திருப்பமாக அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு உடலை ரெயில்வே தண்ட வாளத்தில் வீசி சென்றது தெரியவந்தது.

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரேத பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் இந்த வழக்கை மதிகோன் பாளையம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினார்கள். மதிகோன் பாளையம் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து குப்பனின் 2-வது மனைவி ராஜேஸ்வரியை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

விவசாயி குப்பனின் முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் நான் குப்பனை 2-வது திருமணம் செய்தேன். ஏற்கனவே எனக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். என் கணவரும் என்னைவிட்டு பிரிந்து சென்றதால் மகனுடன் சேர்ந்து குப்பனுடன் வசித்து வந்தேன்.

இந்த நிலையில் வேறு ஒருவருடன் எனக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த குப்பன் என்னை கண்டித்தார். இதனால் எனக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். உறவினர் ஒருவரின் உதவியோடு அவரது பிணத்தை தண்டவாளத்தில் போட்டு விட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். ஆனால் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குப்பன் பிணத்தை தண்டவாளத்தில் வீசுவதற்கு உதவியாக இருந்த உறவினர் யார்? என்பது குறித்தும் ராஜேஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.