சென்னை:
நெல்லை மாவட்டம் லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பால்சன். விவசாயி. இவர் கடந்த 19.6.2013 அன்று மாலை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரம், வாகனத்தை நிறுத்தி ஆர்.சி. புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை காட்டுமாறு கூறினார்.
உடனே பால்சன் ஆர்.சி. புத்தகத்தின் ஜெராக்சை கொடுத்தார். அப்போது ஓட்டுனர் உரிமத்தை வீட்டில் வைத்துவிட்டு வந்ததாக கூறினார். இதைக் கேட்ட மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் தவறான வார்த்தைகளால் திட்டியதோடு லத்தியால் பால்சனை தாக்கி உள்ளார்.
மேலும் ஏட்டு லிங்க ராஜனும் பால்சனை அடித்து உதைத்து தாக்கி உள்ளார். பின்னர் பால்சனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர் தங்களை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரை வள்ளியூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். முன்னதாக போலீசார் தாக்கியதில் காயமடைந்த பால்சனுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் பால்சனை ஆஸ்பத்திரியில் வைத்தும் போலீசார் தாக்கி உள்ளனர். பின்னர் ஜெயில் ஆஸ்பத்திரியில் பால்சன் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் தன்னை தாக்கி பொய் வழக்கில் கைது செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பால்சன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த போலீசார் 3 பேரும், வாகன சோதனையின் போது பால்சன் தங்களை தாக்கியதாக கூறினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், போலீசார் 3 பேரும் பால்சனை தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது, ஆவணங்களின் அடிப்படையில் உறுதியாகி உள்ளது. எனவே, 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டருக்கு அரசு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை போலீசார் 3 பேரிடம் இருந்து தலா ரூ.20 ஆயிரம் வசூல் செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.