கோப்புப்படம் 
செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற கணவர்

பாவூர்சத்திரம் அருகே குடும்ப தகராறில் மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாலை மலர்

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சின்னதம்பி நாடார்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் அனந்த பெருமாள் (வயது 55). இவரது மனைவி பன்னீர் செல்வம் (50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

மகன்கள் இருவரும் உடல் ஊனமுற்று நடக்க முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இதனால் அனந்த பெருமாள் கடந்த 2 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். ஆனால் அவர் அதற்கு சிகிச்சை எதுவும் பெறவில்லை.

இந்நிலையில் நேற்றுஇரவு கணவன்-மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, நீ தான் செய்வினை செய்து என் குடும்பத்தை கெடுத்து விட்டாய் என கூறி மனைவியை திட்டியுள்ளார். மேலும் வீட்டிலிருந்த மண்எண்ணையை மனைவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் பன்னீர் செல்வம் உடல் முழுவதும் தீ காயம் ஏற்பட்டது. மேலும் அனந்த பெருமாளுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வந்து பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தீக்காயங்களுடன் கிடந்தனர்.

இதுகுறித்து அவர்களது உறவினர்களுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். பின்பு ஆம்புலன்ஸ் மூலமாக இருவரையும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் இன்று இறந்தார். அவரது கணவர் அனந்தபெருமாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பன்னீர்செல்வத்தின் உடலில் கணவர் அனந்த பெருமாள் மண்எண்ணை ஊற்றி தீ வைத்த சம்பவம் அவர்களது மகன்கள் கண்முன்னே நடந்துள்ளது. ஆனால் அவர்கள் மனநிலை பாதித்தவர்கள் என்பதால் அவர்களால் தனது தாயை தந்தையே எரித்ததை உணர முடியாமல் இருந்துள்ளனர். இதனை அக்கம்பக்கத்தினர் பரிதாபத்துடன் பார்த்துச் சென்றனர்.