முசாபர்நகர்:
டெல்லியில் இருந்து ஹரித்வார் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் உத்தர பிரதேச மாநிலம் பவோலி ரெயில் நிலையத்தில் நின்றபோது, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வலுக்கட்டாயமாக ரெயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். அவர்கள் நேராக ரெயில்வே காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
விசாரணையில், அவர்கள் ஜாவேத், அவரது மனைவி ஜூமா மற்றும் மைத்துனி ரேஷ்மா என்பதும், சீட் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் அனைவரையும் 12 பேர் கொண்ட ஒரு கும்பல் தாக்கி கீழே இறக்கி விட்டிருப்பதும் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட கும்பத்தினர் தானா பவனில் இருந்து லோனி ரெயில் நிலையத்துக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும், தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருவதாகவம் ரெயில்வே காவல்துறை அதிகாரி சுக்பால் சிங் தெரிவித்தார்.
இருக்கை தகராறில் ஒரு குடும்பத்தினரை அடித்து பாதி வழியில் இறக்கி விட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.