ஷாகீன் பாக் போராட்டக்களம் 
செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பிலும் போராட்டக்களத்தை விட்டு வெளியேற மறுக்கும் பெண்?

ஷாகீன் பாக் போராட்டக்களத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பெண் அங்கிருந்து வெளியேற மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வைரலாகியுள்ளது.

மாலை மலர்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இவர்கள் சிஏஏ-வுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், போராட்டக்களத்தில் இருக்கும் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டும், மருத்துவமனை செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகியுள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப் மூலம் வைரலாக துவங்கியிருக்கிறது.

எனினும், வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. டெல்லி மருத்துவமனைகளுக்கு ஷாகீன் பாக்கில் இருந்து பரிசோதனைக்காக யாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டக்களத்தில் இருப்பவர்களும் வைரல் தகவலில் உண்மையில்லை என தெரிவித்து இருக்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், வைரல் தகவலில் உள்ளதை போன்று டெல்லி ஷாகின் பாக் போராட்டக்களத்தில் இருந்த பெண் கொரோனா மூலம் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.