செய்திகள்

போலி லாட்டரி சீட்டு அச்சிட்டு கேரளாவில் பரிசு வாங்க முயன்ற கோவை வாலிபர்கள் 3 பேர் கைது

போலி லாட்டரி சீட்டு அச்சிட்டு கேரளாவில் பரிசு வாங்க முயன்ற கோவை வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

கோவை:

தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் கேரளாவில் இருந்து சிலர் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்கிறார்கள்.

கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு 40 கி.மீ. தூரம் தான். இதனால் கோவையில் இருந்தும், பாலக்காட்டில் இருந்தும் ஏராளமான பேர் வேலை வி‌ஷயமாக வந்து செல்கிறார்கள். இதனால் கேரள லாட்டரி சீட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. பரிசு விழுந்தால் கோவையில் உள்ளவர்கள் கேரளாவில் தெரிந்தவர்கள் மூலம் பரிசு தொகையை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த 3 வாலிபர்கள் கேரள மாநிலம் பாலக்காடு ஜி.பி. ரோட்டில் உள்ள தீப்தி லாட்டரி ஏஜென்சிக்கு நேற்று சென்றனர்.

அவர்கள் கேரள அரசின் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரி சீட்டில் தங்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறி லாட்டரி சீட்டை காட்டினர்.

ஏஜென்சி ஊழியர்கள் லாட்டரி சீட்டை சரி பார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் இதுகுறித்து பாலக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன் பாளையத்தை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 30), ரமேஷ் (40), திலீப்குமார் (32) என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேரும் ஜி.பி. ரோட்டில் உள்ள பைவ்ஸ்டார் லாட்டரி ஏஜென்சியில் போலி லாட்டரி சீட்டை கொடுத்து ரூ. 3 ஆயிரம் பரிசு பணம் பெற்றதும், பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட எண்ணை வேறு லாட்டரி சீட்டில் ஒட்டி, அதனை கலர் பிரிண்ட் எடுத்து பரிசு பணம் பெற முயன்றதும் தெரிய வந்தது.

மேலும் இவர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் போலி லாட்டரி சீட்டுகளை தயாரித்துள்ளனர். எனவே பாலக்காடு போலீசார் கோவைக்கு வந்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.