சென்னை:
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கலந்தாய்வில் வெளிமாநில மாணவர்கள் அதிகளவு பங்கேற்று வருகிறார்கள்.
கேரளா, ஆந்திரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் படித்த மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள். இவர்களின் குடும்பங்கள் வேலை நிமித்தமாக பணியிட மாறுதல் உள்ளிட்ட காரணங்களால் வெளி மாநிலங்களில் வசித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் அங்குள்ள மருத்துவ கல்லூரிகளிலும், தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் போலியான இருப்பிட சான்று பெற்று தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 24-ந்தேதி விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் ஒய்.அம்ஜத்அலி புகார் கொடுத்திருந்தார்.
புகார் குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை மருத்துவ கல்வி இயக்ககத்தில் இருந்து பெற்றனர். அதே போல வெளிமாநில தர வரிசை பட்டியலை வாங்கினர்.
தமிழக தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், மற்ற மாநிலங்களின் தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனரா? என்று ஒப்பிட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில் மருத்துவ கலந்தாய்வில் போலி இருப்பிட சான்று கொடுத்ததாக புகார் கூறப்பட்ட கேரள 9 மாணவர்களில் 4 பேருக்கு எம்.பி.பி.எஸ். இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:-
போலி இருப்பிட சான்று புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை கொடுக்கிறோம். புகார் தெரிவிக்கப்பட்ட 9 கேரள மாணவர்களில் 8 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர்.
அதில் 3 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடமும், ஒரு மாணவர் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். இடமும் பெற்றுள்ளனர்.
ஒரு மாணவர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை. போலீஸ் விசாரணையில் போலியான இருப்பிடச் சான்று கொடுத்தது தெரிய வந்தால், கலந்தாய்வில் கலந்து கொண்டு இடம் பிடித்த 4 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.