செய்திகள்

ஜெ.தீபா வீட்டில் புகுந்த போலி வருமான வரித்துறை அதிகாரி போலீசில் சரண்

ஜெ. தீபா வீட்டில் புகுந்து போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபு என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். #Deepa #FakeITOfficer #tamilnews

சென்னை:

ஜெ. தீபா வீட்டில் புகுந்து போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபு என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் நிறுவனருமான ஜெ.தீபா தி.நகர் சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார். அவரது பேரவை அலுவலகமும் வீட்டிலேயே இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் காலை தீபாவின் வீட்டுக்கு டிப்-டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் சென்றார். தீபா கணவர் மாதவனிடம் தன்னை வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறினார். அவர் வைத்திருந்த அடையாள அட்டையில் மித்தேஷ் குமார் என்கிற பெயரும், மத்திய நிதித்துறையில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அந்தஸ்தில் இருப்பதாகவும் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சோதனை நடத்துவதற்கான வாரண்டு ஒன்றையும் அந்த நபர் காட்டினார்.

இதையடுத்து அந்த நபர் தீபாவின் வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார். அவர் மீது சந்தேகம் அடைந்த தீபா பேரவை வக்கீல் அணியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மாம்பலம் உதவி கமி‌ஷனர் செல்வம், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர் உள்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்றனர்.

இதனால் உஷாரான மர்ம நபர் காம்பவுண்டு சுவரில் ஏறி ஆய்வு செய்வது போல் நடித்து நைசாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதன் பின்னரே அவர் போலி அதிகாரி என்பது தெரிய வந்தது.

இதுபற்றி மாம்பலம் போலீஸ் நிலையத்தில் மாதவன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தப்பியோடிய நபர் விட்டுச் சென்ற அடையாள அட்டையை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் மேற்பார்வையில் போலி வருமான வரித்துறை அதிகாரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜெ. தீபா வீட்டில் புகுந்து போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபு என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ஜெ. தீபா வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபு மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர். #Deepa #FakeITOfficer #tamilnews