செய்திகள்

ஜெ.தீபா வீட்டுக்குள் புகுந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்- 4 தனிப்படை தேடுகிறது

ஜெ.தீபாவின் வீட்டில் சோதனை நடத்த முயன்று தப்பியோடிய போலி வருமான வரி அதிகாரியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #Deepa

மாலை மலர்

சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா வீடு உள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாலிபர் ஒருவர் தீபா வீட்டுக்கு வந்தார்.

அப்போது தீபா வெளியில் சென்று இருந்தார். தீபாவின் கணவர் மாதவன் மட்டும் வீட்டில் இருந்தார்.

அவரிடம் அந்த வாலிபர் தனது பெயர் மிதேஷ்குமார் என்றும் வருமானவரித்துறை உதவி கமி‌ஷனராக இருப்பதாக கூறினார். உங்கள் வீட்டில் வருமான வரி சோதனைக்காக வந்திருக்கிறேன் என்றார்.

இதுதொடர்பாக மாதவன் தீபாவின் வக்கீலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே தீபா வீட்டிற்கு வந்தார். அந்த நபரிடம் நீங்கள் ஒருவர்தான் வந்துள்ளீர்களா என்று வக்கீல் கேட்டார்.

அதற்கு அவர் காலை 10 மணிக்கு மற்ற அதிகாரிகள் வருவார்கள். வீட்டில் இருந்து யாரும் பொருட்களை வெளியில் எடுத்து செல்லாமல் இருக்க என்னை கண்காணிப்பதற்காக அனுப்பியுள்ளனர் என்றார்.


அவரது நடவடிக்கையில் தீபாவின் வக்கீலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இதுபற்றி அவர் மாம்பலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

போலீசார் வந்திருப்பதை அறிந்த அந்த வாலிபர் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று வருகிறேன் என்று கூறி வெளியேற முயன்றார். அவரை வெளியேற விடாமல் அங்கிருந்தவர்கள் தடுத்தனர். அப்போது அவர் வீட்டின் மதில் சுவர் வழியாக ஏறி குதித்து தப்பி ஓடினார்.

இதையடுத்து வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போலீசார் அவரை துரத்தினார்கள். ஆனால் அவர் போலீசாரின் கையில் சிக்கவில்லை. தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான சாலை வழியாக ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபா ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி செய்ததாக கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனவே தீபாவிடம் மிரட்டி பணம் பறிப்பதற்காக அந்த வாலிபர் அங்கு வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே தீபா வீட்டில் புகுந்து தப்பி ஓடி தலைமறைவான மர்ம வாலிபரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மர்ம வாலிபரை பிடிக்கும் முயற்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரது புகைப்படம் மற்றும் அடையாள அட்டை சிக்கியுள்ளதால் அதன் மூலம் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் கூறியதாவது:-

இன்று காலை நான் வீட்டில் இருந்த போது வேலைக்காக பெண் ஒருவர் கதவை தட்டினார். நான் கதவை திறந்து பார்த்தபோது வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி ஒருவர் வந்திருப்பதாக கூறினார். அவரை வரச் சொல்லுமாறு சொன்னேன். அங்கு வந்த அந்த நபர் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்றும், சோதனை நடத்த வந்திருப்பதாகவும் கூறினார். வாரண்டு, அடையாள அட்டை ஆகியவற்றையும் காண்பித்தார்.

அதற்குள் தகவல் அறிந்து தீபாவின் வக்கீலும் வந்தார். நீங்கள் ஒருவர் மட்டும் தான் வந்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு மற்ற அதிகாரிகள் 10 மணியளவில் வருவார்கள் என்றார். வருமான வரி சோதனை என்றால் பத்திரிகையாளர்கள் வருவார்களே. அவர்கள் ஏன் இன்னும் வரவில்லை என்றோம். அவர்கள் சிறிது நேரத்தில் தானாகவே வருவார்கள் என்றார்.

அவரை அங்கு அமர வைத்து விட்டு நான் வீட்டுக்குள் சென்றேன். சிறிது நேரத்தில் அவர் போலி வருமானவரி அதிகாரி என்றும் போலீசார் வந்ததால் தப்பி ஓடி விட்டார் என்றும் அங்கிருந்தவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

எனது மனைவி தீபா மருத்துவ சிகிச்சைக்காக வெளியில் சென்றிருந்தார். இங்கு வந்த நபர் எதற்காக வந்தார் என்பதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்.