கைது 
செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் வீட்டுமனையை விற்க முயற்சி- 6 பேர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வீட்டுமனையை விற்று மோசடி செய்ய முயன்ற பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

திரு.வி.க. நகர்:

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி(வயது 31). இவர்கள் அதே பகுதியில் வீட்டுமனை வாங்குவதற்கு நில தரகர்களான நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (60) மற்றும் மணலியைச் சேர்ந்த ராஜேஷ்(37) ஆகியோரிடம் கேட்டனர்.

அதற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து முகப்பேர் பகுதியில் ராஜம் என்ற பெண்ணுக்கு சொந்தமான 640 சதுர அடியில் காலி வீட்டுமனை இருப்பதாக கூறி அதற்கான நகல்களை காண்பித்து ரூ.48 லட்சத்துக்கு விலை பேசினர். அந்த இடத்தை வாங்க முடிவு செய்த ராஜேஸ்வரி, இதற்காக 2 தவணைகளாக ரூ.15 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்ய அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றனர். அங்கே நிலத்திற்குரிய ஆவணங்களை சரி பார்த்தபோது அது போலியானது என ராஜேஸ்வரிக்கு தெரியவந்தது.

இதுகுறித்து ராஜேஸ்வரி நொளம்பூர் போலீசாருக்கு ரகசியமாக புகார் கொடுத்தார்.

அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரீனா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அங்கு போலி ஆவணங்கள் மற்றும் போலி ஆட்களுடன் பத்திரப்பதிவு செய்ய காத்திருந்த நிலத்தரகர்களான புருஷோத்தமன், ராஜேஷ் மற்றும் அவர்களுடன் இருந்த 4 பேர் என 6 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் புருஷோத்தமனும், ராஜேசும் ராஜம் என்பவருக்கு சொந்தமான நிலத்துக்குரிய பத்திரத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்து அதை பயன்படுத்தி போலியாக விற்க முயன்றதும், இதற்காக போலி கையெழுத்து போட ஆட்களை அழைத்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிலதரகர்களான புருஷோத்தமன், ராஜேஷ், சுவாமிநாதன்(51), நில உரிமையாளர் ராஜம் போல நடித்த கும்பகோணத்தைச் சேர்ந்த திலகா(54), தண்டையார்பேட்டையை சேர்ந்த ஹேமலதா(45), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபா மாகாளி(51) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராஜேஸ்வரியிடம் வாங்கிய ரூ.15 லட்சத்துடன் தலைமறைவான முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.