திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சரவணன் (வயது 37). பனியன் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2000-ம் ஆண்டு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சரவணனின் வலது கை பெருவிரல் எந்திரத்தில் சிக்கி துண்டானது. இதனையடுத்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சரவணன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் துண்டான விரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
விபத்து மூலம் சரவணன் ரூ.50 ஆயிரம் மருத்துவ காப்பீடு பெற்றார். இந்த விபத்தை வைத்து வேறு வழியில் இன்சூரன்சில் இருந்து பணம் பெற தந்தை, மகனும் திட்டமிட்டனர்.
அதன்படி திருப்பூர் ரூரல் போலீஸ் நிலைத்திற்கு சென்றனர். அங்கு பஸ்சுக்காக காத்திருந்தபோது தனது குடும்ப நண்பர் அமிர்தலிங்கம் ஓட்டி வந்த கார் எனது மகன் சரவணன் மீது மோதியதால் கைவிரல் துண்டானதாக புகார் கூறியிருந்தார்.
புகாரையடுத்து அப்போதைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அமிர்தலிங்கம் விபத்தை ஏற்படுத்தியதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்தியதற்காக கோர்ட்டில் அவர் அபராதமும் செலுத்தினார்.
இந்த சம்பவத்தின் அடிப்படையில் சரவணன் திருப்பூர் விரைவு கோர்ட்டு எண் 4-ல் விபத்தில் ஏற்பட்ட காயத்துக்கு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் இன்சூரன்ஸ் நிறுவனம் பல சந்தேக கேள்விகளை கேட்டது.
இதனையடுத்து மாட்டிக்கொள்வோம் என்று சரவணன் வழக்கை திரும்ப பெற்றார்.
பொய் வழக்கு போட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணம் பறிக்க திட்டமிட்டதால் இது குறித்து கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இன்சூரன்ஸ் பணத்துக்காக போலி புகார் அளிக்கப்பட்டுள்ளதை திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. போலி புகார் செய்த கணேசன், அவரது மகன் சரவணன், குடும்ப நண்பர் அமிர்தலிங்கம், முறையாக விசாரணை நடத்தாத சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு தலா 2 ½ ஆண்டு சிறை தண்டனையும், தலா 1000 ரூபாய் அபராததும் விதித்து நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார். 17 வருடங்களுக்கு பின்னர் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.