குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், கடந்த 2010-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை ‘பெயில்’ ஆக்கக்கூடாது என்றும், அவர்களை கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) பெறச்செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இதற்கிடையே, இந்த கட்டாய தேர்ச்சி முறையால் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக மாநிலங்களும், கல்வியாளர்களும் முறையிட்டனர். இதனால், கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.