வாஷிங்டன்:
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் பிரைவசி செட்டிங்-களை மாற்றியமைக்க இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
புதிய அப்டேட்கள் ஃபேஸ்புக் சேகரித்து வைத்திருக்கும் பயனர் தகவல்களை மிக எளிமையாக தேடி, அவற்றை டவுன்லோடு செய்து அழிக்க வழி செய்யும். இத்துடன் பயனர்கள் தங்களின் அக்கவுண்ட் பாதுகாப்பை அதிகரிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர் பார்க்க விரும்பும் தகவல்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த வழி செய்துள்ளது.
ஃபேஸ்புக் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பயனர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் செட்டிங்ஸ் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என ஃபேஸ்புக் தலைமை பாதுகாப்பு அதிகாரி எரின் எகான் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
வரும் வாரங்களில் தனிப்பட்ட அம்சங்களை இயக்க கூடுதல் அம்சங்களை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு பூதாகரமாய் வெடித்தது. இதுதொடர்பாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க பாராளுமன்ற குழு சார்பில் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதுது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பில் சந்தேகம் எழுந்துள்ளதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவன பங்குகள் 18% வரை சரிந்துள்ளது. பயனர் தகவல்கள் கசிந்த விவகாரம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் அதன் பயனர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.