செய்திகள்

பேஸ்புக்கில் உலா வரும் 20 கோடி போலி கணக்குகள்

உலகளாவிய அளவில் பேஸ்புக் பயனாளர்கள் மத்தியில் சுமார் 20 கோடி போலி கணக்குகள் உலா வந்து கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. #Facebook

மாலை மலர்

ஐதராபாத்:

உலகில் அனைத்துமே டிஜிட்டல்மயமாகி விட்ட இன்றைய நவீன தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாவதவர்கள் யாருமில்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக விளங்கிவரும் பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், உலகளாவிய அளவில் பேஸ்புக் பயனாளர்கள் மத்தியில் சுமார் பத்து சதவீதம் போலி கணக்குகள் உலா வந்து கொண்டிருப்பதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

குறிப்பாக, சராசரியாக மாதந்தோறும் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கடந்த 31-1-2016 நிலவரப்படி 186 கோடியாக இருந்தது. இதில் 6 சதவீதம் போலி கணக்குகளாகும். 31-1-2017 நிலவரப்படி இந்த எண்ணிக்கை 14 சதவீதம் வளர்ச்சி அடைந்து 213 கோடியாக உயர்ந்துள்ளது. 

அன்றாடம் பேஸ்புக் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை கடந்த 31-1-2016 நிலவரப்படி123 கோடியாக இருந்தது. 31-1-2017 நிலவரப்படி இந்த எண்ணிக்கை 14 சதவீதம் வளர்ச்சி அடைந்து 140 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளை சேர்ந்த பயனாளர்கள் முக்கிய காரணம் ஆவார்கள்.

31-12-2017 நிலவரப்படி, இதுபோன்ற போலி கணக்குகள் மொத்தம் உள்ள பேஸ்புக் பயனாளர்கள் எண்ணிக்கையில் சுமார் பத்து சதவீதமாக (சுமார் 20 கோடி) உயர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட போலி கணக்குகள் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற வரத்தக சந்தையில் வளர்ச்சி நிலையை நோக்கி முன்னேறிவரும் நாடுகளில் அதிகமாக உள்ளதாக நம்பப்பவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த போலி கணக்குளில் பெரும்பகுதி ஒரு பயனாளரின் இரண்டாவது உபரி கணக்காக தொழில் மற்றூம் வர்த்தகம், அமைப்பு சார்ந்த நிறுவனங்களை முதன்மைப்படுத்துவதற்காகவும், வளர்ப்பு பிராணிகள் ஆகியவற்றுக்காகவும் தொடங்கி நிர்வகிக்கப்பட்டுவரும் கணக்குகளாக உள்ளன. #tamilnews #Facebook