புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ரிங் ரோட்டில் நேற்று மாலை அதிவேகமாக சென்ற கார் பல வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்தவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கார் ஓட்டிச் சென்றது ஒடிசா ரஞ்சி அணியின் முன்னாள் கேப்டன் ஹலதார் தாஸ் என்பது தெரியவந்தது. அவர் வேகமாக கார் ஓட்டிச் சென்றதை நேரில் சிலர் பார்த்துள்ளனர்.
இதையடுத்து தாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது காரை கைப்பற்றி உள்ளனர். காரின் முன் மற்றும் பின் பாகங்கள் சேதமடைந்துள்ளன. அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டினாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.