செய்திகள்

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு: ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுத்தர பிரதமருக்கு அன்புமணி கடிதம்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

மாலை மலர்

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியா முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டாலும், தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வடமாநிலங்களில் மாணவர்கள் சுதந்திரமாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், தென் மாநிலங்களில் தேர்வுக்கு முன்பாக சோதனை என்ற பெயரில் மாணவர்களும், மாணவிகளும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர். கேரளத்தில் மாணவி ஒருவர் ஆசிரியர்கள் முன்னிலையில் உள்ளாடைகளை களையச் செய்து கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி தங்களின் கவனத்திற்கு வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட 10 மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நுழைவுத்தேர்வுகளில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானால் அதை சமாளிப்பதற்காக ஒரே மாதிரியான விடை கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட வினாத்தாள் தொகுப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கும்.

அவ்வாறு தயாரிக்கப்பட்டவற்றில் எளிமையான வினாத்தாள்கள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளன. கடினமான வினாத்தாள்கள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வினியோகிக்கப்பட்டன. இது திட்டமிட்டு நடந்ததா அல்லது எதேச்சையாக நடந்ததா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பது மட்டும் உண்மை.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற, ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.