செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: ராம் நாத் கோவிந்த், மீரா குமார் தவிர அனைவரின் மனுக்களும் நிராகரிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம் நாத் கோவிந்த், மீரா குமார் ஆகியோரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. மற்ற அனைவரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மாலை மலர்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதன்காரணமாக நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யவதற்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் போட்டியிடுகிறார். இவர்கள் உள்பட 95 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பாளரை வாக்களிக்க தகுதியுள்ள 50 பேர் முன்மொழிய வேண்டும் என்பதால் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது ராம் நாத் கோவிந்த், மீரா குமார் ஆகியோரின் மனுக்கள் தவிர மற்றவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது, பிரதான வேட்பாளர்களான ராம் நாத் கோவிந்த், மீரா குமார் ஆகியோரின் மனுக்கள் தவிர மற்ற அனைவரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஜூலை 1–ந் தேதியாகும். எனவே, போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ செய்தி அன்றைய தினம் வெளியாகும். ஜூலை 17-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 20-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.