சென்னை:
பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்வு அறையில் தேர்வர் மற்றொரு தேர்வரை பார்த்து எழுதுவது கண்டறியப்பட்டால் அந்த மாணவர் ஓராண்டுக்கு தேர்வு எழுத முடியாது. தேர்வு எழுதும் மாணவர் விடைகள் அடங்கிய துண்டு சீட்டு வைத்திருந்தாலோ அதைப் பார்த்து தேர்வு எழுத முயன்றாலோ அந்த மாணவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால் ‘கிரிமினல்’ நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அந்த மாணவர் நிரந்தரமாக தேர்வு எழுதத்தடை விதிக்கப்படும். அதிக மதிப்பெண் தரும்படி, விடைத்தாளில் எழுதுவது, வேண்டுகோள் விடுப்பது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் விடைத் தாள்கள் ரத்து செய்யப்படும்.
கண்காணிப்பாளரை மிரட்டுவது, தாக்குவது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குறிப்பிட்ட காலத்திற்கோ, அல்லது நிரந்தரமாகவோ தேர்வு எழுதத்தடை விதிக்கப்படும்.
விடைத்தாள்களை திருப்பித்தராமல் எடுத்து செல்வது, கிழித்து சேதப்படுத்துவது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.
வினாத்தாளை ‘லீக்‘ செய்தால் 3 ஆண்டுகள் வரை தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். முறைகேட்டில் ஈடபட்ட மாணவர் விளக்கம் எழுதித்தர மறுத்தால் அந்த தேர்வு மட்டுமின்றி எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும். விடைத்தாள்களை மற்ற மாணவர்களிடம் மாற்றி எழுதி வாங்கினால் 5 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது.
விடைத்தாளில் பெயர், இன்ஷியல் அல்லது சிறப்பு குறியீடுகள் கண்டறியப்பட்டால் அந்த விடைத்தாள்களின் மதிப்பீடு நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #publicexam #tamilnews