லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தை சேர்ந்தவர் சுக்லால் (50). பா.ஜ.க.வை சேர்ந்தவரான இவர் பிலிபித் மாவட்டத்தில் உள்ள பர்கேரா சட்டசபை தொகுதியில் கடந்த 2007-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏழு முறை எம்.எல்.ஏ.வான கிசண்லால் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை சுக்லால், தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறுகையில், ''சுக்லால் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் கடும் அவதிப்பட்டு வந்தார். டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொண்டு நேற்று இரவு வீடு திரும்பினார். இன்று காலை நாற்காலியில் உட்கார்ந்தபடி துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்'' என தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார், சுக்லால் வீட்டுக்கு விரைந்து சென்றனர். சுக்லால் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கட்சியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.