ஐதராபாத்:
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க உள்ளது. அதேசமயம், பா.ஜ.க.வைச் சேர்ந்த முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமல் தோல்வி அடைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் வீரபத்ர சிங் வெற்றி பெற்றுள்ளார்.
குறிப்பாக குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலை விட கணிசமான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
இவ்வாறு கலவையான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள்’ என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அதன் பணியை சிறப்பாக செய்துள்ளன. குஜராத்தில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னேறியிருக்கிறது. பா.ஜ.க.வின் சில தலைவர்கள் கூட தோல்வி அடைந்துள்ளனர். எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை வாக்குப்பதிவு எந்திரங்கள் நிறைவு செய்துள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறுவதை நிறுத்த வேண்டும். குறை கூறுபவர்கள் எதையாவது சொல்வார்கள். தேவைப்பட்டால் அவர்கள் நீதிமன்றம் சென்று நிரூபிக்கட்டும். ஒவ்வொரு தேர்தலிலும் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.