செய்திகள்

இரணியல் அருகே மாங்காய் பறிக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலி

இரணியல் அருகே மாங்காய் பறிக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

இரணியலை அடுத்த குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வில்சன்(வயது30). கட்டிடத் தொழிலாளி.

தற்போது மாங்காய் சீசன் என்பதால் அவரது வீட்டின் அருகே நின்ற மாமரத்தில் ஏராளமான மாங்காய்கள் கிடந்தது. இந்த நிலையில் வில்சன் சம்பவத்தன்று காலையில் தனது வீட்டின் மாடிக்கு சென்றிருந்த போது அருகில் நின்ற மாமரத்தில் மாங்காய் பறித்தார்.

அப்போது காற்று பலமாக வீசியதால் வில்சன் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கழுத்து மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

மேலும் படுகாயம் அடைந்த வில்சனை உறவினர்கள் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வில்சன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரேனியல் சேசுபாதம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.