செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு கட்சி பதவி பறிப்பு: ஓ.பி.எஸ்.-எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

தினகரனை ஆதரிக்கும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.பிரபுவின் கட்சி பதவி பறித்து ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு கடந்த மாதம் டி.டி.வி. தினகரனை நேரில் சந்தித்து அவரது அணிக்கு ஆதரவு தெரிவித்தார். டி.டி.வி. தினகரன் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

பிரபு எம்.எல்.ஏ. மீது அ.தி.மு.க. தலைமை கழகம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இப்போது அவரது கட்சி பதவியை பறித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபற்றி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விழுப்புரம் தெற்கு மாவட்டம் தியாக துருகம் ஒன்றிய இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.பிரபு எம்.எல்.ஏ. (கள்ளக்குறிச்சி தொகுதி) இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

விழுப்புரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளான மாவட்ட மாணவர் அணி செயலாளர் சீனிவாசன், சின்னசேலம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன், திருக்கோவிலூர் பேரூராட்சி கழக முன்னாள் செயலாளர் இளவரசன் ஆகியோர் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியை விட்டு நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் நங்கநல்லூர் வி.பரணி பிரசாத் நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #Tamilnews