செய்திகள்

பெரம்பலூரில் சுற்றுப்புறத்தை நீர் தேங்காமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் மட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்தருக்க வேண்டும் என்று கலெக்டர் சாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை மலர்

பெரம்பலூர்:

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் துப்புரவு காவலர்கள், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் சாந்தா இம் முகாமினை பார்வையிட்டு பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கும், ஆலத்தூர் தொழில் நுட்பக் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உலரவைத்து பிறகு தண்ணீரை நிரப்ப வேண்டும். வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் மட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

டெங்குவை ஒழிக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் பொதுமக்களுக்கும் டெங்குவை ஒழிக்க ஒத்துழைப்புத்தரும் வகையில் தங்களது சுற்றுப் புறங்களை நீர் தேங்காத வகையில், கழிவுப் பொருட்கள் தேங்காத வகையில் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் தான் டெங்கு இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தை நம்மால் மாற்ற இயலும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து மருதடி கிராமத்தில் பாரதப்பிரதமர் சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டார்கள்.