சென்னை:
கிண்டி சிறுவர் பூங்காவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது. பூங்காவுக்கு வரும் மக்களை கவர்வதற்காக பொழுது போக்கு அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒலி-ஒளி அரங்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதை கடந்த அக்டோபர் மாதம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, வன விலங்குகளுடன் நாம் திரையில் தோன்றும் வகையில் ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்படுகிறது. ‘3டி அனிமேஷன்’ பரிமாண தோற்றத்தில் விலங்குகளுடன் நம்மை காட்சிப்படுத்துகிறார்கள்.
அரங்குக்குள் நாம் சென்றதும் நம்மை நோக்கி கேமரா படம் பிடித்து வன விலங்குகளுடன் நாம் இருப்பது போல் திரையில் ஒளிபரப்புகிறார்கள்.
நாம் கை அசைப்பது, விலங்குகளை தொடுவது, அதற்கு முத்தம் கொடுப்பது, விலங்குகள் மீது கை போட்டு நடந்து செல்வது என காட்டுக்குள் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை நாம் திரையில் காண முடியும்.
இதற்காக டைனோசர், புலி, சிறுத்தை, கரடி, கங்காரு, ஒட்டகசிவிங்கி, பென்குயின், பாண்டாகரடி, டால்பின், அனகோண்டா உள்ளிட்ட 10 வகையான விலங்குகளுடன் நாம் பயணிப்பது போல் திரையில் காட்டுகிறார்கள். சுமார் 15 நிமிட நேரம் இது ஒளிபரப்பாகிறது.
பொதுமக்கள் பார்த்து மகிழ இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 50 ரூபாய், குழந்தைகளுக்கு 15 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை கண்டுகளிக்க பொது மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.