செய்திகள்

லார்ட்ஸ் டெஸ்ட்: மொயீன் அலி சுழலில் சுருண்டது தெ.ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அசத்தல் வெற்றி

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மாலை மலர்

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்கில் 458 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 361 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 97 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. குக் 59 ரன்னுடனும், பேலன்ஸ் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பான வகையில் பந்து வீசினார்கள். இதனால் குக் மேலும் 10 ரன்கள் எடுத்து 69 ரன்னிலும், பேலன்ஸ் மேலும் 12 ரன்கள் எடுத்து 34 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

அடுத்து வந்த முதல் இன்னிங்சில் 190 ரன்கள் குவித்த ரூட் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (1), மொயீன் அலி (7), டவ்சன் (0), பிராட் (0) அடுத்தடுத்து வெளியேற இங்கிலாந்து அணி 182 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

9-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் வுட் ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாட, வுட் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். வுட் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க, பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்து இங்கிலாந்தை அணியை 200 ரன்கள் தாண்டச் செய்தார்.

கடைசி விக்கெட்டாக பேர்ஸ்டோவ் அவுட்டாக இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 233 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பேர்ஸ்டோவ் 51 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மோர்கல், ரபாடா தலா மூன்று விக்கெட்டுக்களும், மகாராஜ் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 97 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், 2-வது இன்னிங்சையும் சேர்த்து 330 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 331 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

5-ம் நாள் ஆட்டம் மீதமுள்ளதால் தென் ஆப்பிரிக்கா சமாளித்து வெற்றி பெறும் என்று கணித்த நிலையில், இங்கிலாந்து பவுலர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 10 ஓவர்கள் முடிவதற்குள் 2 விக்கெட்டுகளை தென் ஆப்ரிக்கா இழந்தது. தொடர்ந்து இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா திணறியது.

குறிப்பாக இங்கிலாந்தின் மொயீன் அலியின் சுழற்பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையைக் கட்டினர். முன்னணி பேட்ஸ்மேனான அம்லா, டி காக் ஆகியோர் தலா 11, 18 ரன்களில் வெளியேறினர். 37 ஓவர்களில் 119 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்விவை தழுவியது.

இங்கிலாந்து அணியில் மொயீன் அலி 6 விக்கெட்டுகளையும், டாவ்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.