கைது 
செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் மாணவியை தாக்கிய என்ஜினீயரிங் மாணவர் கைது

நுங்கம்பாக்கம் மகளிர் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை தாக்கிய என்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

சென்னை:

நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் பல்வேறு கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்க காட்டாங் கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படிக்கும் 22 வயது மாணவி ஒருவரும் வந்து இருந்தார்.

கல்லூரிக்குள் அந்த மாணவி நின்று கொண்டு இருந்த போது மாணவர் ஒருவர் அவரிடம்வந்து பேசினார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மாணவர் திடீரென மாணவியை தாக்கி எட்டி உதைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவ- மாணவிகள் திண்டதால் பரபரப்பான சூழல் உருவானது. கல்லூரி பேராசிரியர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் கலை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

தாக்குதலில் காயம் அடைந்த மாணவி இது பற்றி நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு காமிரா காட்சியை ஆய்வு செய்து மாணவியை தாக்கிவிட்டு தப்பிய தண்டையார்பேட்டையை சேர்ந்த தெய்வேந்திரன் (22) என்பவரை கைது செய்தனர். அவர் மதுரவாயலில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

மாணவர் தெய்வேந்திரனுக்கு பேஸ்புக் மூலம் மாணவி ஒருவர் பழக்கமாகி இருந்தார். இந்த நிலையில் கலைநிகழ்ச்சிக்காக மகளிர் கல்லூரிக்கு வந்த போது தாக்குதலுக்குள்ளான மாணவியை கண்டதும் பேஸ் புக்கில் பழக்கமானவர் என்று நினைத்து தெய்வேந்திரன் பேச முயன்றார்.

அப்போது மாணவி பேஸ் புக்கில் பழகியது நான் இல்லை என்று மறுத்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறே தாக்குதலில் முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.