சென்னை:
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்புக்கான கவுன்சிலிங் (கலந்தாய்வு) நேற்று முன்தினம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவு வெளியாவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
ஏனெனில் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் 5000 முதல் 6730 ரேங்க் பெற்றுள்ளவர்கள் மருத்துவ படிப்பில் சேரவும் தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து விட்டால் அந்த இடம் காலியாக கிடக்கும். அதை தவிர்க்க என்ஜினீயரிங் படிப்புக்கான கவுன்சிலிங் தள்ளி போடப்பட்டது.
தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 17 முதல் 22-ந்தேதிக்குள் நடைபெறும் என தெரிகிறது. அதில் முதல்கட்ட கவுன்சிலிங் ஜூலை 19-ந்தேதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, என்ஜினீயரிங் கவுன்சிலிங் மறுநாள் அதாவது ஜூலை 20-ந்தேதி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து ஜூலை 31-ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். பின்னர் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் என்ஜினீயரிங் வகுப்புகள் தொடங்கும் என எதிபார்க்கப்படுகிறது.
ஒருவேளை கல்லூரி தொடங்க கோர்ட்டு விலக்கு வழங்கினால் ஆகஸ்டு 3-வது வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடைபெறும் தேதி நாளை (30-ந்தேதி) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்புக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால் இந்த ஆண்டு 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் என்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்காக தரவரிசைப் பட்டியல் கடந்த 22-ந்தேதி வெளியிடப்பட்டது. அவர்களில் 59 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.