செவ்வாப்பேட்டை:
செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பிராங்ளின் (வயது 22) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருமழிசை சாண்ட்ரோ சிட்டியில் உடன் படிக்கும் நண்பர்கள் 3 பேருடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இவரது சொந்த ஊரு ஒரத்தநாடு ஆகும்.
தீபாவளி பண்டிகையையொட்டி பிராங்கிளினுடன் தங்கி இருந்த நண்பர்கள் 3 பேர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். வீட்டில் பிராங்ளின் மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் பிராங்ளின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்-இன்ஸ் பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் பிராங்ளின் பிணமாக கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.
தற்கொலை செய்து கொண்ட பிராங்ளின் அடிக்கடி செல்போனில் ‘கேம்’ விளையாடி வந்து உள்ளார். அவர் நீலத்திமிங்கலம் விளையாட்டுக்கு அடிமையானவரா? என்று அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.