செய்திகள்

தரங்கம்பாடியில் கடல் அலையில் சிக்கி என்ஜினீயர் மாணவர் பலி

தரங்கம்பாடியில் நண்பர்களுடன் கடலில் குளித்த என்ஜினீயர் மாணவர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை சேந்தங்குடி கோகுலம் நகரை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பூர்ணசந்திரன் (வயது 18). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று பூர்ணசந்திரன், தனது நண்பர்களான தினேஷ்குமார், பிரசன்னகுமார் ஆகியோருடன் தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்றார்.

இதனை தொடர்ந்து அவர்கள், கடல் முகத்துவாரம் பகுதியில் குளித்து கொண்டிருந்தனர்.

இதில் தினேஷ்குமார், பிரசன்னகுமார் ஆகியோர் கரைக்கு திரும்பினர். ஆனால் பூர்ணசந்திரன் மட்டும் குளித்து கொண்டிருந்தார். அப்போது அலையில் சிக்கி பூர்ணசந்திரன் கடலில் மூழ்கினார். இதனை கண்ட அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். சிறிது நேரத்தில் பூர்ணசந்திரனின் உடல் கரை ஒதுங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் பூர்ணசந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.