கோவை மாநகராட்சியில் துப்புரவு பணிக்கான நேர்காணலுக்கு வந்தவர்கள் 
செய்திகள்

துப்புரவு பணியாளர் வேலைக்கு குவிந்த என்ஜினீயரிங் பட்டதாரிகள்

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் வேலைக்கான நேர்காணலுக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகள் குவிந்தனர்.

கோவை மாநகராட்சியில் 2 ஆயிரம் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தவிர ஆயிரத்து 500 பேர் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்புரவு பணியாளர் வேலைக்கு கோவை மாநகராட்சி விண்ணப்பங்களை வரவேற்றது. அதன்படி 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதற்காக வந்த விண்ணப்பதாரர்கள் வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக நேர்காணல் நடத்தப்பட்டன. சாமியானா போடப்பட்டு அதில் அழைப்பு கடிதம் வைத்திருந்தவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டனர்.

இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 56 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் வந்திருந்தனர். துப்புரவு பணிக்கான கல்வி தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

நேர்காணல் நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. நேர்காணல் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.