செய்திகள்

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

புதுடெல்லி:

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். லஞ்ச பணம் கொடுக்க உடந்தையாக இருந்ததாக அவரது நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இருவரையும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். தொடர் விசாரணைக்குப் பிறகு தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

டி.டி.வி.தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையே ரூ.10 கோடி பண பரிமாற்றத்தில் தொடர்பாளராக செயல்பட்டதாக கூறப்படும் ஹவாலா தரகர் நரேஷ் என்பவரிடம் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT