தஞ்சாவூர்:
தமிழகத்தில் போதிய மழை பெய்யாததாலும், மழைநீரை சேமிக்காததாலும் வரலாறு காணாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கேட்டு பல்வேறு இடங்களில் பெண்கள், பொதுமக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதேபோல் தஞ்சை அடுத்த திருக்கானூர் பட்டியில் காலிகுடங்களுடன் இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வாரத்திற்கு ஒரு நாள் லாரி மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுகின்றனர். ஆனால் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கடந்த ஒரு வருடமாக சுத்தம் செய்யப்படவில்லை. முற்றிலும் குப்பைகளால் நிரம்பி உள்ளது. கழிவுநீர் கலந்து வருவதால் அந்த தண்ணீரையும் பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை.
இதனை பயன்படுத்தி சில தனியார் லாரிகளில் ஒரு குடம் ரூ.12 முதல் 15 வரை தண்ணீரை விற்பனை செய்து வருகின்றனர். 3 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர். குடிநீருக்காக சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வரக்கூடிய அவல நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த திருக்கானூர்பட்டி கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் 400 பேர் இன்று காலை தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வல்லம் டி.எஸ்.பி சீதாராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்படவில்லை.
இதையடுத்து துணை வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) கந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர் கோதுமணி மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் போர்வெல் போட்டு தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும். மேலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில்அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டு நாட்களுக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் எனக்கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் மறியலால் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.