செய்திகள்

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சேவை கட்டணம்: ஸ்டேட் வங்கி முடிவுக்கு ஊழியர் சங்கம் கண்டனம்

ஏ.டி.எம்.களில் இருந்து ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ஜூன் 1-ந்தேதி முதல் ரூ.25 வசூலிக்கப்படும் என்று ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

ஏ.டி.எம்.களில் இருந்து ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ஜூன் 1-ந்தேதி முதல் ரூ.25 வசூலிக்கப்படும் என்று ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி. கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஸ்டேட் வங்கி நிர்வாகம் தன்னுடைய சேவை கட்டணத்தை உயர்த்தியதோடு மட்டுமின்றி சில புதிய கட்டணங்களையும் புகுத்தியுள்ளது. சிதைந்து போன மற்றும் கிழிந்த நோட்டுக்களை மாற்றுவதற்கு சேவை கட்டணம் புதிதாக வசூலிக்க திட்டமிட்டுள்ளது.

20 நோட்டுகளுக்கு மேல் அல்லது ரூ.5000-க்கு மேல் கிழிந்த நோட்டுகளை செலுத்தினால் ஒரு நோட்டுக்கு ரூ.2 அல்லது ஆயிரம் ரூபாய்க்கு ரூ.5 இவற்றில் எது அதிகமோ அதனை சேவை கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே மாத இருப்பு ரூ.1000 முதல் ரு.5000 வரை இருக்க தவறினால் மாதம் ரூ.20 முதல் ரூ.100 வரை அபராதம், 2-வது முறையாக பாஸ்புக் பெறுவதற்கு ரூ.100 மற்றும் ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ.50 உள்ளிட்ட பல்வேறு சேவை கட்டணங்களை வசூலிக்கின்றன.

ஸ்டேட் வங்கியின் ஏகபோக இந்த தன்மையை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.

இதன் மூலம் 25 கோடி வாடிக்கையாளர் மீதும் பொதுமக்கள் மீதும் கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளது.

தற்போது சேமிப்பு கணக்கை முடிப்பதற்கு ஸ்டேட் வங்கி ரு.500 அபராதம் விதிக்கிறது. இது ஒரு தனி நபர் எந்த வங்கியில் கணக்கு வைத்து கொள்ள வேண்டும் என்ற அவரது உரிமையை பறிக்கும் செயலாகும்.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், ஸ்டேட் வங்கியும் ஒன்று சேர்ந்து பெரு நிறுவனங்களிடம் இருந்து வங்கிக்கு வரவேண்டிய வராக்கடனை ஒழுங்காக வசூலித்தாலே சேவை கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.

சாதாரண மக்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வங்கி சேவை சென்றடைய வேண்டும் என்பது தான் தேசிய மயமாக்கலின் நோக்கமாகும். உடனே இந்த சேவைக் கட்டணத்தை ஸ்டேட் வங்கி திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.